அடுத்த ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த
கூட்டு எதிர்க் கட்சி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் நேற்று (03) நள்ளிரவு அவர் இதனைக் கூறினார்.
90 வீதமானோரின் கருத்தே இதுவாகும். இது கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள என்னுடைய கருத்து மாத்திரமல்ல.
2020 ஆகும் போது நாட்டின் ஜனாதிபதி முறைமையை மாற்றாது போனால், கூட்டு எதிர்க் கட்சியின் சார்பில் கோட்டாபயவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார். அவர் மாத்திரமே அதற்குத் தகுதியானவர். இதனை அறிந்தே அரசாங்கம் அவரை கைது செய்ய முயற்சி செய்கின்றது.
ஜனாதிபதி முறைமையை இந்த அரசாங்கம் மாற்றினால், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமாராக்குவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.