மாணவர்கள் படுகொலையை கண்டித்து வடக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் அழைப்பின் பேரில் இன்று இந்த முழு அடைப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும், இந்தப் படுகொலைகளுக்கு விரைவாக நீதி வழங்கக் கோரியும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க வலியுறுத்தியும் இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், புளொட், ரெலோ, மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளும், யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகமும் இணைந்து இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்தப் போராட்டத்துக்கு வவுனியா வணிகர் கழகம் உள்ளிட்ட வடக்கிலுள்ள பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.