சி.வியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக்கியிருக்க வேண்டுமாம்!
வடக்கில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்ல என்றால், அவரை கட்சியிலிருந்து விலக்கியிருக்க வேண்டுமென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், முதலமைச்சர் சி.வி. குறித்து கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றபோது விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு அவர் மறுப்பு வெளியிட்டிருந்தால் அது ஊடகங்களில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான மறுப்பு எதுவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களை அவரது தனிப்பட்ட கருத்து என்று கூற முடியாது. ஏனெனில், அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலேயே போட்டியிட்டு முதலமைச்சராக இருக்கிறார். அப்படி அவர் கூறியது கூட்டமைப்பின் கருத்து இல்லையெனில் அவரை அக் கட்சியில் இருந்து விலக்கியிருக்க வேண்டும்.
ஆகவே, தாங்கள் மிதவாதிகள் என்றும் நாங்களே இனவாதம் பேசுகின்றோம் என்றும் கூறி பழைய நாடகத்தையே இங்கு மீண்டும் அரங்கேற்ற முயற்சிக்க வேண்டாம்” என்றார்.