அச்சத்துடன் வாழ்ந்து வரும் காணாமல் போனோரின் உறவுகள்
யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைத்து வேதனையுடன் காலத்தை கழிக்கும் தங்களுக்கு, மன ஆதங்கத்தைக்கூட வெளிப்படையாகக் கூறமுடியாமல் அச்சத்துடனும் மன அழுத்தத்துடனும் வாழ்ந்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆயித்தியமலையில் சிரேஷ்ட நிபுணத்துவ உளநல மருத்துவர் ரீ.கடம்பநாதன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரில் தங்கி வாழ்ந்த உறவினர்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் இவ்வாறு தமது நிலையை வெளிப்படுத்தினர்.
காணாமல் போன தமது கணவன் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நெற்றியில் பொட்டோடு வாழ்ந்து வருவதாக தெரிவித்த கணவனை தொலைத்த பெண்கள், நெற்றிப் பொட்டை தமக்கான பாதுகாப்பாகவும் கவசமாகவும் எண்ணி வாழ்ந்தாலும் அதற்கும் இடையூறு விளைவிக்கப்படுவதாக குறிப்பிட்டனர்.
சமூகத்தில் உள்ளவர்களின் கேலியும் கிண்டலும், அதிகாரிகளின் புறக்கணிப்பு, வறுமை என தமது வாழ்க்கைப் போராட்டம் தங்களை அதிக நெருக்கடிக்கும் விரக்தி நிலைக்கும் இட்டுச் செல்வதாகவும் காணாமல் போனோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கஷ்டத்திற்கும் துன்பத்திற்கும் மத்தியில் வாழும் தமது வீடுகளை யானைகளும் சேதப்படுத்தி வருவதாக தெரிவித்த மக்கள், இதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிவித்தனர்.
உறவுகளை இழந்த சோகத்தினாலும், அதற்கு பின்னரான நெருக்கடிகளாலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இம்மக்களிடையே இயல்பாக உள்ள பலங்கள் மற்றும் வளங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு எதிர்காலத்தை அவர்கள் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பது தொடர்பாகவும், அதற்குத் தேவையான அனுசரணைகளையும் வழங்குவதற்கு ஒட்டு மொத்த சமூகமும் முன்வர வேண்டுமென உளநல மருத்துவர் ரீ.கடம்பநாதன் குறிப்பிட்டுள்ளார்.