புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட வலம்புரி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள், சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல் தொலைவில், 15 மீற்றர் ஆழத்தில் இந்தச் சிதைவுகள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டன.
சுழியோடியான பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே வலம்புரி கப்பலின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படை சுழியோடிகள் கண்டுபிடித்தனர்.சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான வலம்புரி என்ற துருப்புக்காவி கப்பல், 1998ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் நாள், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் 20 சிறிலங்கா கடற்படையினர் பலியாகினர். கடற் கொந்தளிப்பு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளால் அப்போது இந்தக் கப்பலை மீட்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
18 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் கப்பலின் ஐந்தில் ஒரு பகுதி கடலுக்கு அடியில் உள்ள மண்ணில் புதையுண்டு போயுள்ளது. கப்பலின் சிதைவுகளைச் சுற்றி கடல் தாவரங்கள் வளர்ந்திருக்கும் நிலையில், மீன்களின் வாழ்விடமாகவும், அது மாறியுள்ளது.