Breaking News

ஜெயலலிதாவின் உடல் நலத்தில் முன்னேற்றம் - அப்பல்லோ நிர்வாகம்



சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜக்கிய ராஜ்யத்திலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை வந்த கையிஸ் மற்றும் புனித தாமஸ் மருத்துவமனையின் பன்னாட்டு சிறப்பு மற்றும் ஆலோசனை மருத்துவர் ரிச்சர்ட் பியலே என்ற மருத்துவ நிபுணரின் கருத்தையும் அப்பல்லோ மருத்துவமனை பெற்றிருக்கிறது.

முதலமைச்சரை பரிசோதித்த மருத்துவர் ரிச்சர்ட், பல்வேறு சிகிச்சை அறிக்கைகைளையும் ஆய்வு செய்து, மருத்துவ நிபுணர்களோடு விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அந்த கலந்தாய்வின் அடிப்படையில் பொருத்தமான ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் பிற சிகிச்சை நடவடிக்கைகளோடு முதலமைச்சரின் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

அளிக்கப்படும் சிகிச்சைக்கு நல்லவிதமாக பதிலளிக்கும் முதலமைச்சர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்திருக்கிறது.