நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள்
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை துணிச்சலுடன் வெளியுலகிற்கு தெரியபடுத்துவதில் பெரும் பங்காற்றிய தமிழ் ஊடவியலாளர்களில் ஒருவரான மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவுபெறுகின்றன.
நிமலராஜன், கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ௲ கட்டப்பிராய் பிரதேசத்தில் அமைந்திருந்த அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
நிமலராஜன் உயிரிழந்து இன்றுடன் 16 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், படுகொலை தொடர்பில் எவ்விதமான முன்னேற்றகரமான விசாரணைகளும் இடம்பெறாத நிலையில் அவரது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நிமலராஜனின் படுகொலைக்கு நீதிகோரியும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் இன்று யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேரூந்து நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஊடகவியலாளர்கள் தமது பணியினை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சூழலை ஏற்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி, ராவய, உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஊடகவியலாளராக கடமையாற்றிய நிமலராஜன், மூன்று மொழிகளிலும் பரீட்சயமுள்ளவராகவும், நடுநிலையாக செய்திகளை வழங்குபவராகவும் திகழ்ந்நதால் தென்னிலங்கை ஊடகவியலாளர்களிடையே நன்மதிப்பை பெற்றவராகவும் காணப்பட்டார்.
யாழ். கட்டப்பிராய் பகுதியில் வசித்து வந்த போது, 1996ஆம் ஆண்டு அவரது வீடு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருந்தது. மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
தமிழ் மக்களுக்காக தனது சேவையினை அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் வழங்கிய மயில்வாகனம் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.