Breaking News

பாகிஸ்தான் உளவுத்துறையை கண்டித்து காஷ்மீரில் போராட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அடக்கு முறைக்கு எதிராகவும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டியும் அங்கு ஏராளமான தலைவர்கள் போராடி வருகின்றனர்.

இவர்களை பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் சேர்ந்து கொலை செய்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இதனால் மனக்கசப்பில் இருந்து வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், ராணுவம் மற்றும் உளவுத்துறையின் அட்டூழியங்களை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோட்லி நகரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘காஷ்மீரிகளின் கசாப்புக்காரன், பாகிஸ்தான் ராணுவம்’, ‘ஐ.எஸ்.ஐ.யை விட நாய்கள் அதிக விசுவாசத்துடன் இருக்கும்’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பியவாறே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சமீபத்தில் கவலை வெளியிட்டு இருந்த அமெரிக்கா, அங்கு மக்களிடையே நிலவும் அதிருப்திக்கு அமைதியான முறையிலும், அரசியல் ரீதியாகவும் தீர்வு காணுமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.