விக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறார் ரிஷாத்..!!
யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் வெளியிட்டிருக்கும் நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சரின் எதிர்ப்புக்கு அஞ்சி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற முயற்சியை கைவிடப் போவதில்லை என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் சூளுரைத்துள்ளார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு நேற்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு நேற்று கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“யுத்தம் காரணமாக கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களைப் போன்று அனைத்து வசதிகளுடனும் மீள்குடியேற்ற வேண்டும் என்பதே எனது கோரிக்கை. நல்லாட்சி அரசாங்கம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான குழுவொன்றையும் நியமித்திருக்கிறது.
ஆனால் வடமாகாண ஆளுநர் சி.வி.விக்னேஸ்வரன் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் இந்த முயற்சியை நிறுத்தவில்லை. தற்போது மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையில் 4 அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் நியமித்து நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது.
வடமாகாண முதலமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சிரேஷ்ட தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களை மீள்குடியேற்றுமாறுதான் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் வடமாகாண முதலமைச்சர் மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். எவ்வாறாயினும் முதலமைச்சரது எதிர்ப்பினால் நாங்கள் இந்த முயற்சியை விட்டு விலகுவதில்லை” - என்றார்.