முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வடமாகாண சபை புறக்கணிக்கின்றது
முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப்போக்கை வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை கடைப்பிடிப்பதாக தமித்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அது மாறாது இருக்குமானால் வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் ஒழுங்காக நடைபெறாது என்ற உண்மையை அவர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு முஸ்லீம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் விசேட கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ ஞர்கார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த சந்திப்பில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையாக கிடைக்கும்வரை எந்தவாரு அரசாங்கத்துடன் இணைந்து எந்தவொரு அமைச்சுப்பொறுப்பையும் கையிலெடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆகவே தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை கூட தாங்கள் உறதியாக முன்னெடுக்க முடியாத சூழ்நிலையிலுளன்ளதாகவும் ஆனால் அந்த துரதிஷ்ட நிலைமை முஸ்லிம் மக்களுக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை நாம் ஒருவருக்கொருவர் பாதகம் செய்கின்ற சமூகங்களாக இருக்காது ஒருவருக்கொருவர் உதவியாக நாம் எப்படி முன்னேற முடியும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.