மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச இந்தியா செல்லும் இலங்கை அமைச்சர்கள்
இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இந்தியா, இலங்கை இடையே அமைச்சரவை நிலையிலான பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெற உஎள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏராளமான தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்தியா, இலங்கை இடையே அமைச்சரவை நிலையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக இந்திய செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்தப் பேச்சுவார்த்தைக்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர உள்ளிட்ட இலங்கை குழு வரும் 2ம் திகதி இந்தியா செல்ல உள்ளதாக மீன்பிடி அமைச்சு கூறியுள்து.
இதுதவிர 10 பேர் அடங்கிய வடக்கு மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் குழு நவம்பர் 3ம் திகதி இந்தியாவுக்குப் புறப்படுகிறது.
இருநாட்டு மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைகளை அடுத்து, அமைச்சர்கள் நிலையிலான பேச்சு நடைபெறவுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.