Breaking News

பௌத்த குடியிருப்பு இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை

இலங்கையில் வட மாகாணம் போன்று கிழக்கு மாகாணத்திலும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலை வைப்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது. 


அம்பாரை மாவட்டத்திலுள்ள இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாணிக்கமடு கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையில் திடீரென புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமைக்கு அப்பிரதேச மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

மாயக்கல்லி மலை தொல் பொருள் ஆராய்ச்சி இலாகாவிற்குரிய பிரதேசம் என்று ஏற்கனவே அடையாளமிடப்பட்டுள்ள நிலையில் இந்த புத்தர் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது. 

அம்பாரை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தில் மாணிக்கமடு என்ற தமிழ் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை அண்டியதாக மாயக்கல்லி மலை அமைந்துள்ளது. 

அம்பாரை நகரிலிருந்து வாகனமொன்றில் பௌத்த கொடிகளுடன் 15-க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளினால் எடுத்து வரப்பட்ட புத்தர் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

பௌத்த மக்கள் குடியிருப்பு இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படுவது தொடர்பாக அவர்களிடம் சுட்டிக்காட்டிய போது அதனை ஏற்க மறத்து சிலையை வைத்து வழிபாடு செய்து விட்டு அவர்கள் சென்றுள்ளதாகவும் அந்த பிரதேச மக்கள் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக பிரதேச மக்கள் தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள நிலையில், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவுப் ஹக்கீம் , நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் அந்த இடத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக சென்றனர். 

மேற்கூறிய புத்தர் சிலை இந்த பிரதேசத்தில் எதிர்காலத்தில் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் என்ற அச்சத்தையும், சந்தேகத்தையும் உள்ளுர் மக்கள் அவர்களிடம் வெளிப்படுத்தினர். 

அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலையை அகற்றுவது குறித்து ஏற்கனவே தான் போலிஸ் மா அதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசியதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார். 

நீதிமன்றம் ஊடாக புத்தர் சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.