சுதந்திரக் கட்சியின் திடீர் "ஒப்பரேஷன்" -ரொபட் அன்டனி
நாட்டின் அரசியல் நகர்வுகள் சூடு பிடிப்பதும்
பின்னர் தணிந்து போவதும் வழமையான விடயங்களாகும். அரசியல் என்பது அவ்வாறான இயல்பை கொண்டது. ஆனால் அவ்வப்போது சூடுபிடிக்கும் அரசியல் நிலைமையானவை நாட்டின் எதிர்காலத்தை மறுபக்கம் திருப்பிவிடும் வழமையை கொண்டவை என்பதும் வரலாறு எமக்கு படிப்பித்த பாடங்களாகும்.
அரசியல் என்பது எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு விவகாரம்தான். அரசியல் காய் நகர்த்தல்கள், நகர்வுகள், மக்களை திசை திருப்பும் செயற்பாடுகள், மக்களை கவரும் செயற்பாடுகள், அதனால் ஏற்படும் புற நிலைமைகள், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகள், எதிர்காலத்தில் அதிகாரத்தை பிடித்துக் கொள்வதற்கான நகர்வுகள் மற்றும் இவற்றினால் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் என அரசியல் செயற்பாடுகளின் பண்புகளையும் அதன் இயல்புகளையும் கூறிக் கொண்டே போகலாம்.
அதுவும் ஆசியாவில் விசேடமாக தெற்காசிய பிராந்தியத்திலுள்ள நாடுகளில் இவ்வாறு அரசியல் கலாசாரமானது அவ்வப்போது திடீர் திடீர் மாற்றங்களுக்குள்ளாகுவதும் அரசியல் ரீதியில் பூகம்பங்கள் ஏற்படும் வழமையாகிவிட்டது. அந்த வகையிலேயே அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மன்றக் கல்லூரியில் ஆற்றிய உரையானது நாட்டின் அரசியலில் பூகம்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியை ஒரு சில தரப்பினர் பாராட்டி வருகின்ற அதேவேளை வேறு சில தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஜனாதிபதியின் இந்த உரையையும் அதன் பின்னர் ஜனாதிபதி தலைமை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து தவறுகின்ற கருத்துக்களையும் முன்வைக்கின்றன விமர்சனங்களையும் பார்க்கும்போது இந்த விடயம் தொடர்பில் ஒரு ஆழமான ஆராய்வு அவசியமாகின்றது.
ஜனாதிபதி ஏன் இந்த உரையை நிகழ்த்தினார் என்பதற்கு மூன்று விடயங்களை அடிப்படையாக வைத்து வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் இவ்வாறானதொரு உரையினை நிகழ்த்தினார் என்பதற்கு முதலாவதாக முன்வைக்கப்படும் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்கு இவ்வாறு உரையாற்றினார் என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது.
இரண்டாவதாக தற்போது பொறுப்புக்கூறல் விசாரணை தொடர்பாக பேசப்படுகின்றமையினால் இராணுத்தை காப்பாற்றுவதற்காக ஜனாதிபதி இவ்வாறு உரையொன்றை நிகழ்த்தினார் என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது. மூன்றாவதாக தற்போது ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நிறுவனங்கள் அசாதாரணமான முறையில் செயற்படுகின்றனவா? என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது.
இதில் முதலாவது விடயத்திற்கே அதிகமான வலிமை காணப்படுவதை இங்கு அவதானிக்க முடிகின்றது. அதாவது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கும் அக்கட்சியை மீண்டும் பலப்படுத்தவுமே ஜனாதிபதி இவ்வாறானதொரு நகர்வை முன்னெடுத்தார் என்பது பிரதானமாக முன்வைக்கப்படும் விடயமாக உள்ளது.
அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது தற்போது மிகவும் தெளிவான வகையில் பிளவடைந்து காணப்படுகின்றது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அதாவது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அணியினர் உத்தியோகபூர்வமற்ற முறையில் சுதந்திரக் கட்சியிலிருந்து ஒதுங்கி தனித்து செயற்பட்டு வருகின்றனர்.
ஒன்றிணைந்த எதிரணி என்ற பெயரில் இயங்கும் மஹிந்த அணியினர் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்திய வண்ணம் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் உண்மையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது வீழ்ச்சிப் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றனர்.
இந் நிலையில் வலுவற்ற நிலையில் காணப்படும் சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் காணப்படுகின்றது. அந்த வகையில் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சில அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பது தவிர்க்கப்பட முடியாத ஒரு விடயமாக காணப்படுகின்றது.
வீழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக் ஷவை சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வந்து அவரை முன்நிறுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுப்பப்படுகின்றது.
அதாவது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து போட்டியிடக்கூடிய தலைவர் ஒருவரை உருவாக்க வேண்டிய தேவை சுதந்திரக் கட்சிக்கு காணப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
எனவே புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பணிகள் ஒருபுறம் இருக்க ஏதாவது ஒரு அரசியல் சூழ்நிலையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய தேவை ஏற்படின் அதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சவால் விடும் வகையில் போட்டியிடக்கூடிய தலைவர் சுதந்திரக் கட்சியில் உருவாக்கப்பட வேண்டும் என்பது கட்சி முக்கியஸ்தர்களின் நோக்கமாக இருக்கின்றது.
அவ்வாறு பார்க்கும்போது சுதந்திரக் கட்சியின் முக்கிய இடத்தில் கோத்தபாயவை கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெறலாம் என ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது கோத்தபாயவை சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராக கொண்டுவர வேண்டும் என சுதந்திரக் கட்சியின் ஒருசில முக்கியஸ்தர்கள் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.
மேலும் கூட்டு எதிரணியினரும் கோத்தபாயவை முன்னிறுத்தும் வகையில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். இவற்றைக் கொண்டே இந்தக் கேள்வி எழுப்பப்படுகின்றது.
காரணம் தற்போது என்னதான் தேசிய அரசாங்கம் என்று கூறப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கரங்களே அரசாங்கத்தில் ஓங்கியிருப்பதாக சுதந்திரக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நகர்வுகள் சுதந்திரக் கட்சியை வீழ்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகவே சுதந்திரக் கட்சியினர் உணர்கின்றனர். எனவே இந்த அனைத்து விடயங்களுக்கும் விடை காணும் நோக்கில் சுதந்திரக் கட்சிக்குள் கோத்தபாய ராஜபக் ஷவை முன்னிறுத்தும் நோக்கில் நகர்வுகள் இடம்பெறலாம்.
இவ்வாறான பின்னணியிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒரு சில விடயங்களை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது ஐக்கிய தேசியக் கட்சியானது தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும். எனவே நாங்களும் சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வகையில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் சுதந்திரக் கட்சியின் முதல் நிலை உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எடுத்துக் கூறுவதாக தெரியவருகின்றது.
அவ்வாறான கட்டத்திலேயே ஜனாதிபதி ஒருசில காரசாரமான உரைகளை நிகழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிபெற வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஒருவேளை தோல்வி அடையுமாக இருந்தால் அது ஜனாதிபதியின் தலைமைக்கு சவால் விடுவதாக அமைந்துவிடும்.
ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனவே சுதந்திரக் கட்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி விருப்பம் இல்லையாயின் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சியின் முன்னேற்றத்திற்காக அவர் இந்த விடயத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
மறுபுறம் கடந்த வருடம் ஆரம்பமான தற்போதைய அரசாங்கமானது நாட்டின் பிரதான பிரச்சினைகளை தீர்ப்பதிலும் பொருளாதார அபிவிருத்தியினை முன்னெடுப்பதிலும் சாதனையை நிகழ்த்தாவிடின் அரசாங்கத்திற்கு சவால் மிக்கதாகவே அமைந்துவிடும்.
மேலும் தற்போது புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு முன்னெடுக்கப்படும் புதிய அரசியலமைப்பினூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் அடுத்து பிரதமர் ஆட்சி முன்வைக்கப்படலாம். அப்படியான நிலைமை உருவானால் கோத்தபாய ராஜபக் ஷ முன்வராமல் மஹிந்த ராஜபக் ஷ முன்னிலைப்படுத்தப்படும் சாத்தியமும் காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் தற்போதைய அரசியல் நகர்வுகளை பார்க்கும்போது சுதந்திரக் கட்சி மீண்டும் பலமான கட்சியாக மாற வேண்டுமானால் கோத்தபாயவை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடையும் நிலைமை காணப்படுகிறது. இவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும்.
அவர் அதற்கான ஆர்வத்தை வெ ளிக்காட்டாத நிலையில் சுதந்திரக் கட்சியின் முதல் நிலை உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த அணியினர் இதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலைமை காணப்படுகின்றது. இதேவேளை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அரசியல் பிரவேசம் குறித்த தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதாவது ""அரசியல் பிரவேசம் தொடர்பில் நான் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மாற்றங்களுக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறாயின் அவருக்கு அடுத்தபடியாக வரப்போவது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டே இந்த விடயம் அனுமானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமையவே எனது பெயர் கூறப்படுகின்றது. ஆனால் நான் இன்னும் அதுபற்றி தீர்மானிக்கவில்லை. எவ்வாறாயினும் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது அதன் பின்னரே இது குறித்த தீர்மானிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த விவகாரம் குறித்து உறுதியானதும் இறுதியானதுமான தீர்மானம் இல்லை. இருப்பினும் நான் பல வருடகாலமாக மக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள நபர்.
அதனால் எதிர்காலத்தில் மக்கள் சேவைகளை முன்னெடுக்க அரசியல் பாதையை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து தீர்மானிப்போம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இது குறித்து என்னிடத்தில் பேசவில்லை. இருப்பினும் சமூகத்தில் இது குறித்து பேசப்படுகின்றது. பல நபர்களின் பெயர்கள் இவ்வாறு சமூகத்தில் வலம் வருகின்றன. நேரம் வருகின்ற போது பார்ப்போம். அந்த தருணத்தில் யார் அவசியம் என்பது குறித்து சிந்திப்போம்.
அதற்கமைய தகுதியானவரை தேர்ந்தெடுப்போம்.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபர் நானாக இருப்பின் அதனை ஏற்றுக்கொள்வேன். பதவிக்கு அப்பால் சென்று நாட்டிற்கு முன்னர் செய்ததை பார்க்கிலும் ஒரு படி அதிகமாக எதனையாவது செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்"" இவ்வாறு கோத்தபாய ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் கோத்தபாய ராஜபக் ஷ தனது அரசியல் பிரவ ேசத்துக்கான ஆர்வத்தை வெளிப் படுத்தியுள்ளதுடன் சமூகத்திலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு பார்க்கும்போது கோத்தபாய ராஜபக் ஷவும் அரசியல் பிரவேசத்திற்க தயாராக இருக்கின்றமை தெளிவாகின் றது.
அந்த வகையில் தற்போதைய அரசியல் நகர்வுகளை பார்க்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை சுதந்திரக் கட்சிக்குள் முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற விடயம் இயல்பாகவே முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறெனினும் புதிய அரசியலமைப்பு வரைவு முன்வைக்கப்படும் வரையில் எதனையும் நிச்சயமாக கூற முடியாது. இல்லாவிடின் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை எதனையும் நிச்சயமாக உறுதிப்பட கூற முடியாது.
ஆனால் சுதந்திரக் கட்சியானது தனது பலத்தை மீண்டும் நிரூபிப்பதற்கும் வெற்றிவாகை சூடும் கட்சியாக மீண்டும் வலம் வருவதற்கும் அரசியல் சூழ்நிலைகளை தாண்டி பல்வேறு காய்நகர்த்தல்களை முன்னெடுக்கும் என்பதை எதிர்பார்க்க முடியும்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்