விக்னேஸ்வரனுக்கு மேலதிக பாதுகாப்பு – அமைச்சே தீர்மானிக்கும் என்கிறது அரசு
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என அரசாங்கம் நேற்று அறிவித்தது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில், முதலமைச்சரின் பாதுகாப்புத் தொடர்பான கேள்வியொன்று எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறைப் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, “நாட்டு மக்களுடைய பாதுகாப்புக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு, பாதுகாப்பு அமைச்சுக்கும் உள்ளது. அந்த வகையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால், அரச பாதுகாப்பு வழங்கப்படும். இது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
“வெறுமனே அரசியல் ரீதியான காரணங்களுக்காக வேண்டி பாதுகாப்பு கோரினால், அந்தப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும், நாட்டின் பொதுமக்களின், குறிப்பாக முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை, இந்த நல்லாட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தும்” என அவர் மேலும் தெரிவித்தார்.