Breaking News

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கிறார் சபாநாயகர்

சிறிலங்கா அதிபர், பிரதமர், சபாநாயகர் ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், பிரதம நீதியரசர் சிறீபவனே சிறிலங்கா அரச நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்ததாக வெளியான தகவலை சபாநாயகர் மறுத்துள்ளார்.


ஒரே நேரத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியத்துக்கும், சபாநாயகர் கரு ஜெயசூரிய சீனாவுக்கும் பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே, நாட்டின் நான்காவது நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரதம நீதியரசரிடம் அரச நிர்வாகம் பொறுப்பளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

சிறிலங்கா அதிபர் நாட்டில் இல்லாவிடின், பிரதமரும், அதிபரும், பிரதமரும் நாட்டில் இல்லாவிடின், சபாநாயகரும், இவர்கள் மூவரும் நாட்டில் இல்லாவிடின் பிரதம நீதியரசரும் அரச நிர்வாகத்தை பொறுப்பேற்று நடத்த முடியும்.

அந்த வகையிலேயே பிரதமர நீதியரசர் அரச நிர்வாகத்தைப் பொறுப்பேற்றிருந்ததாக கூறப்பட்டது.

எனினும்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியத்துக்கும் புறப்பட்டுச் செல்ல முன்னரே தாம் நாடு திரும்பி விட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கடந்த 16ஆம் நாள் சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கும், மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை இரவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

எனினும், கடந்த 15ஆம் நாள் அதிகாலை 5.50 மணியளவிலேயே சீனாவில் இருந்து தாம் நாடு திரும்பி விட்டதாக சிறிலங்கா சபாநாயகர் அறிவித்துள்ளார்.