மஹிந்தவுக்கு முடியாமல் போனதை நாம் செய்துள்ளோம்- ஜனாதிபதி
புதிய அரசாங்கத்தின் முதல் இரண்டு வருட காலங்கள், கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆரம்ப இரண்டு வருட காலத்தை விடவும் முன்னேற்றகரமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவு கூர்ந்தார்.
இலங்கை மின்சார சபையில் கடமையாற்றிய, தற்காலிக ஊழியர்கள் 3828 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களைக் கடந்துள்ளது. செய்த பணிகள் எதுவும் கிடையாது எனத் தெரிவித்திருந்தார். நாம் அவருக்கு தெளிவாகக் கூறுகின்றோம். நீங்கள் உங்களது அரசாங்கத்தில் செய்ய முடியாது போன பல அம்சங்களை நாம் செய்திருக்கின்றோம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னை மக்கள் தேரிவு செய்வதற்கு பல்வேறு அம்சங்கள் காரணமாக இருந்தன. சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை, தொழிற்சங்க உரிமைகள், ஊடகச் சுதந்திரம் என்பவற்றையே மக்கள் என்னிடம் வேண்டி நின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற ஆரம்ப இரண்டு வருடங்களில் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க முடியாமல் போயிருந்தது. இதனைத் தவிர்ப்பதற்காகவே வரலாற்றில் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்காகவே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.