மஹிந்தவுக்கு மீண்டும் ராஜயோகம் : புத்தாண்டுக்கு முன்னர் மஹிந்த அரசாங்கம்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறை, புளத்தசிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் உட்பட அமைச்சரவையே தற்போது அரசாங்கத்தை முன்னெடுத்து வருகிறது. எனினும் ஜனாதிபதிக்கு இன்னும் நிறைவேற்று அதிகாரம் காணப்படுகிறது.
தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதியால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்க அனுப்ப முடியும்.
இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பிறகு மஹிந்த ராஜபக்ஷ அரசாளும் ராஜயோகம் வந்துள்ளது. நாங்கள் எங்களது வேலைத்திட்டங்களை 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவிருந்தோம். எனினும் சுப நேரம் இருக்கவில்லை. இதுதான் உண்மையான கதை.
மஹிந்தவுக்கு அரசாளும் யோகம் ஆரம்பித்துள்ளதால், நாங்கள் எங்கள் வேலைகளை ஆரம்பித்து அடுத்த தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கத்தை அமைப்போம்.
நாட்டின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும். அப்போது முழுமையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முடியும் எனகுமார வெல்கம மேலும் குறிப்பிட்டார்.`