முன்னாள் ஜனாதிபதியின் கர்ச்சிப்புக்கு காரணமானவர்கள் யார்?
இந்தச் சூளுரை சாத்தியமாகுமா என்பதற்கு அப்பால் மகிந்தவின் சூளுரைப்பு நல்லாட்சிக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறையவே ஆட்சியில் உள்ளனர் என்பதுடன் மகிந்த ராஜபக்சவும் எதற்கும் துணிந்து களமிறங்கக் கூடியவர்.
எனவேதான் தனிக்கட்சி அமைப்பது ஆட்சியைக் கைப்பற்றுவது என்ற மகிந்த ராஜபக்சவின் சூளுரை யினை சாதாரண விடயமாகக் கருதி விடக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவியிருந்த மகிந்த ராஜபக்ச பதவி இழப்புக்குப் பிறகும் காட்டுகின்ற தடிப்பை, ஆட்சியைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் காட்ட முடியவில்லை என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
அதாவது ஆட்சியில் இருப்பவர்களின் தடிப்பை விட பதவியை இழந்த மகிந்த ராஜபக்சவின் அதிகாரத் தொனி கூடுதலாகவே உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்று ஆராயப்படுமாக இருந்தால் அதற்கான பதில் இரண்டு காரணங்கள் என்று கண்டறியப்படும்.
இதில் ஒன்று நல்லாட்சியின் பலவீனம். அதாவது நல்லாட்சியில் அபிவிருத்தித் திட்டங்களோ இனப்பிரச்சினைக்கான தீர்வுகளோ பலமாக முன்வைக்கப்படவில்லை.
இதுமட்டுமன்றி சாதாரண விடயங்களில் கூட நல்லாட்சியிடம் ஒரு அசமந்தத்தனமே காணப்படுகின்றது. சமகால உலகில் அதிவேக பயணத்தில் நல்லாட்சியில் இந்த காலங்கடத்தும் நிர்வாகப் போக்கு மக்களுக்கு வெறுப்பைத்தரும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
தவிர முன்னாள் ஆட்சியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது நல்லாட்சியைக் காப்பாற்றுவதாக இருந்திருக்கும்.
எனினும் முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற சட்ட நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்து விடுமோ என்ற பயத்தின் காரணமாக முன்னைய ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கர்ச்சிப்பு பலமாக எழுகை பெற்றுள்ளது.
இது ஒரு புறமிருக்க, மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து இறக்கினால் அது தமக்கான வெற்றி என அமெரிக்காவும் இந்தியாவும் கருதின. இந்த கருத்துடன்பாட்டில் இந்தியா மறைமுகமான வகிபங்கையே கொண்டிருந்தது.
மகிந்த ராஜபக்சவை பதவி இறக்கம் செய்து மைத்திரியை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் ஆக்கிவிட்டால் இலங்கை என்ற நாட்டில் சகல பிரச்சினைகளும் தீர்ந்து போகுமென்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாடு காரணமாக வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற கோரிக்கையை ஜெனிவாவில் வலுக்குறைப்பு செய்ததில் அமெரிக்கா அதிகூடிய பங்கு வகித்தது.
கூடவே மைத்திரி-ரணில் ஆகியோரின் அரசும் போர்க்குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதில் கடும் பிரயத்தனம் செய்தது.
இதன் விளைவுதான் மைத்திரியின் அரசைக் கவிழ்த்து புதிய அரசை அமைப்பேன் என்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சபதமாகும். ஆக, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மேற்கொள் ளாமல் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க நினைத்த அமெரிக்காவும் இந்தியாவும் நல்லாட்சிக்கு சதா ஏக் கத்தை ஏற்படுத்தி விட்டுவிட்டன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்காமல் விட்ட அமெரிக்கா தமிழ் மக்களுக்கு எதிராகவே அதை செய்ய நினைத்ததாயினும் அதன் விளைவு இன்று நல்லாட்சிக்கு பாதகமாக மாறி வருகின்றது.
எதுஎப்படியாயினும் இன்னமும் காலம் கடந்து போகவில்லை. உடனடியாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் எல்லாம் சரியாகும்.
இதை செய்வதற்கு நல்லாட்சி தயங்கும் ஒவ்வொரு கணப்பொழுதும் நல்லாட்சியின் ஆயுளை வலுவேக மாக குறையச் செய்யும் என்பது ஏற்புடைய உண்மை.
எனவே கிடைத்த அதிகாரத்தை - ஆட்சியை தக்க வைக்க வேண்டுமாயின் அதற்கான ஒரேவழி சர்வதேச போர்க்குற்ற விசாரணையும் இனப் பிரச்சினைக்கான தீர்வும் விரைந்து மேற்கொள்வதே ஆகும்.