அரசுக்கு கிழக்கு முதல்வர் எச்சரிக்கை
நாட்டில் நீண்டகாலமாக புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினையை இதய சுத்தியோடு தீர்க்காவிட்டால், நாடு பாரிய சவாலை எதிர்கொள்ளுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
”நல்லாட்சி நிலவும் இக் காலகட்டத்திலே இனப்பிரச்சினைக்கான சிறந்ததொரு தீர்வு கிடைக்கவில்லை என்றால், இன்னும் அரை நூற்றாண்டு சென்றாலும் அதிகார பங்கீடு கிடைக்காத துரதிஷ்டம் தொடரும். அத்தோடு, சிறுபான்மை சமூகங்களை இலவு காத்த கிளிபோல காக்க வைத்தால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும்.
கிழக்கு மாகாணத்திலே வேறு ஒரு புரட்சி நிகழலாம். அது ஆயுதப் புரட்சியாக அல்ல, வறுமைப் புரட்சியாகக்கூட இருக்கலாம். தொழிலில்லாத இளைஞர் யுவதிகள் வறுமைக்கான தமது போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.
ஆகவே கசப்பான வரலாறுகளை மேலும் தொடர விடாமல் அதிகாரப் பகிர்வின் மூலம் அபிவிருத்திகளை மேற்கொண்டு, நாட்டில் சமத்துவத்தைப் பேண அரசு முயற்சிக்க வேண்டும்.
கடந்த மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்ட வரலாறுகள், எங்களுக்கு ஒரு கசப்பான உண்மையை நினைவு கூறிக்கொண்டிருக்கின்றது. இது இனியும் தொடரக் கூடாது.
அதற்காக இந்த நாட்டின் சகல அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு அரசியல் தீர்வை உடனடியாக அமுல்படுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இனவாத நஞ்சை அகற்றுவதற்காக அரசியல் தலைமைகள் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது” என்றார்.