Breaking News

மாவை சேனாதிராஜாவை கேள்வி கேட்டவர் வெளியேற்றப்பட்டார்



நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொதுமக்கள் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மாவை சேனாதிராஜாவை சமரரியாக கேள்வி கேட்கத்தொடங்கினர்.

ஆரம்பம் முதல் செய்தியாளர் கைத்தொலைபேசியில் வீடியோ ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த வேளையில், ஒருங்கிணைப்பு குழுவை மக்கள் கேள்விகேட்டது ஊடகங்களில் வெளிவந்து விடும் எனாபதால் வலிவடக்கு தவிசாளர் சுகிர்தன் ஊடகவியலாளரின் கைத்தொலைபேசியை பறித்து ஒளிப்பதிவை நிறுத்துவதற்காக கைத் தொலைபேசியின் பற்றியை பிடுங்க முற்பட்டார். எனினும் ஊடகவியலாளர் தனது கைத்தொலைபேசியை அவரிடம் இருந்து பெற்றுவிட்டார்.

மேலும் கைத்தொலைபேசியை கூட்டம் முடியும் வரை தன்னிடம் தருமாறும் வலிவடக்கு பிரதேச தவிசாளர் சுகிர்தன் கடுந்தொனியில் ஏசியுள்ளார். மேலும் பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவினை அழிக்குமாறும் நிர்பந்தித்துள்ளார். பின்னர் ஊடகவியாளருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.

இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் தவராசா, வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி, திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.