Breaking News

மைத்திரிக்கு ரஷ்ய ஜனாதிபதி அழைப்பு

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவாவில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பி்ரதமர் நரேந்திர மோடி அளித்த இராப்போசன விருந்துபசாரத்தின் பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனியாகச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவா மாநாட்டுக்கு வந்திருந்த ரஷ்ய அதிபர் புடின் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததால், சிறிலங்கா அதிபருடன் முறைப்படியான இருதரப்பு பேச்சுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை.

எனினும், சிறிலங்கா அதிபருடனான 20 நிமிடச் சந்திப்பு, முறைப்படியான இருதரப்பு பேச்சுக்களை விடவும், காத்திரமானதாக அமைந்தது என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்தச் சந்திப்பின் போதே, சிறிலங்கா அதிபருக்கு ரஷ்யா வருமாறு புடின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அழைப்புக்காக நன்றியையும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போதும், ரஷ்யாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவுடன் சிறிலங்கா நெருக்கமான உறவுகளை பேணவில்லை.

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் சமன் வீரசிங்க மொஸ்கோவை விட  அதிக காலம் கொழும்பிலேயே தங்கியிருக்கிறார். அவருக்கு முன்னர் தூதுவராக இருந்தவரும், சரியான தொடர்புகளை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டால் இருதரப்பு உறவுகள் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.