யுத்தக் குற்ற விசாரணை: பிரித்தானிய பிரதமரை பின்பற்றப் போகிறாராம் மைத்திரி!
யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமென வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈராக்கில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கொண்டுள்ளதைப் போன்று, தாமும் இலங்கை படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஈராக்கிய மக்கள் சார்பு வழக்கறிஞர் குழுவொன்றால் பிரிட்டனின் படைச்சிப்பாய்கள் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தெரேசா மே தெரிவித்ததை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரி, இவ்விடயத்தில் ஐ.நா. இலங்கை தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யுத்தக் குற்ற விசாரணைகளில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கூறி உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றம் தொடர்பில், சர்வதேசத்தின் ஆதரவுடனான விசாரணைக்கு ஜனாதிபதி தொடர்ந்தும் எதிர்ப்பையே வெளியிட்டு வந்துள்ளார். அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல ஊழல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணை செய்தமை தவறெனவும் அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடானது, பாதிக்கப்பட்டோர் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதோடு, நல்லாட்சி உருவாகுவதற்கு பாடுபட்டவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.