Breaking News

மருத்துவ பரிசோதனை: முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு

வட மாகாண சுகாதார அமைச்சினால், முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.


இந்நிலையில், இதுவரை மருத்து பரிசோதனை பெற்றுக்கொள்ளாத முன்னாள் போராளிகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 156 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் பிற்பகல் 1 மணிக்கும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைகளில் காலை 8 மணிக்கும், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிற்பகல் 4 மணிக்கும் இந்த மருத்துவ பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுமென வட மாகாண சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் திடீர் சுகயீனமுற்று மரணமடைந்து வரும் நிலையில், இவர்களுக்கு புனர்வாழ்வின் போது விஷ ஊசி ஏற்றப்பட்டதாக பல சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இதன் உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் முதற்கட்டமாக வட மாகாண சுகாதார அமைச்சினால் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.a