‘தமிழ்’ என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியே பிரபாகரன் போராடினார்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘தமிழ்’ என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தியே போராட்டங்களை நடத்தியிருந்தார். ஆனால் தற்போது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மத அடிப்படையிலான சிவசேனை அமைப்பு தொடர்பில் தனக்கு உடன்பாடு இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், வவுனியாவில் அண்மையில் சிவசேனை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மதங்களினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து இந்து மதத்தை பாதுகாக்கும் நோக்கில் இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அமைப்பை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாகவே நான் நோக்குகிறேன் என்றும் குறிப்பிட்டார்.