அழிந்துபோன இனவாதத்திற்கு உயிரூட்ட மஹிந்த அணி முயற்சி
நாட்டில் அழிந்துபோன இனவாதத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் நாடு முழுவதும் இனவாதத்தை விதைத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு, நாட்டை பிரிக்கப்போவதாகவும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி கொடுக்கப்போவதாகவும் கற்பனை செய்து போலியான பிரசாரங்களையே முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சிலர் மஹிந்தவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு முற்படுவதாக தெரிவித்துள்ள ஹர்ஷன, அவர்களின் கயிற்றில் சிக்காமல் கௌரவமாக ஓய்வெடுப்பதே மஹிந்தவுக்கு சிறந்ததென குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாதென ஹர்ஷன தெரிவித்துள்ளதோடு, நாட்டை ஆண்டு அனுபவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிரந்தரமாக ஓய்வெடுக்க வழிவிடுமாறு பொது எதிரணியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.