Breaking News

மன்னார் – முத்தரிப்புத்துறையில் பதற்றம்..!!

மன்னார் – முத்தரிப்புத்துறை பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைக்குத் திரும்பிய மீனவர்களது படகுகளை ஸ்ரீலங்கா கடற்படை பறிமுதல் செய்துள்ளது.


இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அத்துடன் யுத்தநேரத்தில் பயன்படுத்தியதைப் போன்ற சில போர்க் கப்பல்கள் கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் தரித்து நிற்பதால் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதற்கு மீனவர்கள் அச்சம் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனையடுத்து அங்கு மீனவக் குடும்பங்களிடையே பதற்ற நிலை நிலவியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் இருவர் முத்தரிப்புத்துறை பிரதேச வாசிகளால் அண்மையில் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த இருவரில் ஒருவர் பொது மக்களின் பிடியிலிருந்து தப்பிச்சென்று அருகிலுள்ள பாதுகாப்பு முகாமில் தஞ்சமடைந்த சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த பொலிஸ் உயரதிகாரிகள், இனியும் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறாது என்றும், பாஸ் நடைமுறையின்றி கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதற்கான வசதி செய்துகொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.

எனினும் சில நாட்களுக்குப் பின்னர் நேற்று இரவு தொழிலுக்குத் திரும்பிய மீனவர்களை வழிமறித்த கடற்படையினர் அவர்களது நான்கு மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து ஊடகம் ஒன்று ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவியின் கவனத்திற்குக் கொண்டுவந்தது.

எனினும் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றிருப்பது குறித்து தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று பதிலளித்த அவர், இதுகுறித்து ஆராய்வதாகவும் கூறினார்.

இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடல் மார்க்கமாக ஸ்ரீலங்காவிற்கு கடத்தப்படும் முயற்சிகளை முறியடிக்கவே கரையிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ரோந்து படகுகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.