Breaking News

இலங்கையின் புதிய அரசியல் சாசனம் குறித்து சம்பந்தன் கருத்து



இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில், மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கள் கிழமை) மட்டக்களப்பு கரடியனாறு விவசாய பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ''அதிகார பகிர்வு என்பது சமஷ்யா? அல்லது ஒற்றையாட்சியா? என்ற சொற்பிரயோகத்தில் இல்லை, அது உள்ளடக்கத்தில் தான் தங்கியுள்ளது'' என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ''இந்தியா சமஷ்டி முறையிலான நாடு. ஆனால், ஒற்றையாட்சி முறைகளும் இருப்பதாக ஆய்வாளர்களில் ஒரு சாரர் தமது கருத்துக்களை முன் வைத்திருக்கின்றார்கள். மற்றுமோர் சாரர் இந்தியா ஒற்றையாட்சி முறையிலான நாடு. ஆனால், சில சமஷ்டி முறையிலான ஒழுங்குகள் இருப்பதாக கூறுகின்றார்கள்'' என்றார்.

மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி, துனை அவைத் தலைவர் பிரன்னா இந்திரகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.