இன்னொரு பாகிஸ்தானாக மாறும் இலங்கை..!!
அவன்கார்ட் ஊழல் வழக்குத் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறானது என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை விடுத்து அடுத்த நாள், அதாவது கடந்த 13ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்திய உயர் ஆணையாளர் வை.கே.சின்ஹா சந்தித்தித்திருந்தார்.
இந்தியப் பயணம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காகவே இந்திய உயர் ஆணையாளர், சிறிலங்கா அதிபர் மைத்திரியைச் சந்தித்தாக இந்திய உயர் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்த போதிலும், அவன்கார்ட் ஊழல் வழக்குத் தவறானது என்பது தொடர்பில் மைத்திரியால் விடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதா இல்லையா என்பதை எம்மால் கூறமுடியவில்லை.
இந்தியாவானது சிறிலங்கா பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை விழிப்புடன் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாடாகும். இதற்குக் காரணம் சிறிலங்காவானது இந்தியாவின் அயல்நாடாகும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்ட போது, சிறிலங்கா இராணுவத்தினர் இந்த உடன்படிக்கைக்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபடுவார்களோ என ஜே.ஆர்.ஜெயவர்த்தன அச்சமுற்றிருந்தார். அப்போது சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் இராணுவத்திற்குப் பொறுப்பாகவும் இருந்த லலித் அத்துலத்முதலி கொள்கையளவில் இந்த உடன்படிக்கையை பலமாக எதிர்த்தமையே ஜே.ஆரின் அச்சத்திற்குக் காரணமாகும்.
இந்நிலையில் சிறிலங்கா இராணுவத்தினர் கலகத்தில் ஈடுபட்டால் அவர்களை அடக்குவதற்கு ஜே.ஆரால் முடியாது என்பதால் இந்திய அமைதி காக்கும் படையை சிறிலங்காவிற்கு அனுப்ப முடியுமா என ஜே.ஆரின் உயர் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர் றோனி டீ மெல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது, ஜே.ஆரின் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ராஜீவ் காந்தியால் இந்திய இராணுவக் கப்பல்கள் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டன.
2009ல் யுத்தம் முடிவடைந்த போது, இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா வடக்கிற்குச் சென்றதுடன் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அரசியற் தீர்வொன்றிற்காக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலத்தை இழப்பதற்குத் தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
சரத் பொன்சேகாவின் சர்ச்சைக்குரிய இந்த அறிக்கையைத் தொடர்ந்து, தனது அரசாங்கத்திற்கு எதிராக இராணுவச் சதி இடம்பெறுகிறதோ என மகிந்த சந்தேகித்தார். இவ்வாறானதொரு இராணுவச் சதி நடவடிக்கையில் பொன்சேகா ஈடுபடுவதாக பொன்சேகாவுடன் பகைத்துக் கொண்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவால் மகிந்த ராஜபக்சவிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்தவேளையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த கபில ஹெந்தவிதாரண, சரத் பொன்சேகாவுடன் முரண்பட்டிருந்தார்.
கபிலவின் அறிக்கைகளை மகிந்தவும் நம்பினார். பொன்சேகாவின் இராணுவச் சதி தொடர்பாக மகிந்தவால் அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்ட கையோடு இந்திய உயர் ஆணையாளர் அலோத் பிரசாத்துடன் அலரிமாளிகையில் மகிந்த அவசர கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இராணுவச் சதி ஏற்பட்டால் தனது அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை ஒழுங்குபடுத்தித் தரமுடியுமா என அலோக் பிரசாத்திடம் மகிந்த விசாரித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் கொழும்பிற்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக அலோக் பிரசாத் இந்தியாவிடம் பேச்சு நடத்தினார்.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதிகள் மீது அவன்கார்ட் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அறிக்கையைப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கையளித்தமையை அடிப்படையாகக் கொண்டே மைத்திரியால் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதாக சிவில் சமூகச் செயற்பாட்டாளர் பேராசிரியர் சரத் ஜெயசூரிய தெரிவித்தார்.
பொன்சேகாவிற்கு எதிராக மகிந்தவைத் தவறாக வழிநடத்தும் நோக்குடன் புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கைகள் கையளிக்கப்பட்ட போது, அதனை மகிந்த வெளியில் தெரிவிக்கவில்லை. அவர் இந்தியாவின் உதவியைக் கோரியதுடன், இராணுவத் தளபதி பதவியிலிருந்தும் பொன்சோவை நீக்கினார்.
புலனாய்வு அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மைத்திரி தனது கருத்தை வெளியிட்டிருப்பார் எனில், இது மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கும். ஏனெனில் அரசாங்கத்திற்குள்ளும் இது தொடர்பில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் இது சிறிலங்கா அதிபரின் நற்பெயருக்கும் தீங்கு விளைவித்துள்ளமையே காரணமாகும்.
புலனாய்வுப் பிரிவுகள் புலனாய்வு அறிக்கைகளை அதிபரிடம் கையளித்து அதன்மூலம் இந்த நாட்டின் ஆட்சியைத் தமதாக்கிக் கொண்டால் இன்று பாகிஸ்தானில் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் அந்த நாட்டின் அதிபர் உள்ள நிலைமை போன்றதொரு துன்பகரமான நிலைமை சிறிலங்காவிலும் தோன்றும்.
ஊடகவியலாளர்களான லசந்த மற்றும் பிரகீத் படுகொலைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லையாயின், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என மைத்திரி தனது சர்ச்சைக்குரிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையை வெளியிட்டு ஒரு நாளின் பின்னர், லசந்தவின் படுகொலையில் தான் தொடர்புபட்டிருப்பதை ஏற்றுக்கொண்ட சார்ஜண்ட் மேஜர் தற்கொலை செய்ததுடன், இந்தக் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இது நாள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தற்கொலை செய்த மேஜர் தெரிவித்திருந்தார். புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் அடிப்படையில் இவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படாதவிடத்து குறித்த அதிகாரி விடுவிக்கப்படுவார் எனவும் மைத்திரி தெரிவித்திருந்தார்.
இது மிகவும் ஆபத்தான சூழலாகும். தான் லசந்தவைப் படுகொலை செய்ததாக ஓய்வுபெற்ற சார்ஜண்ட் மேஜர் கூறும் அதேவேளையில், இவர் தனது இராணுவச் சேவையை நிறைவுசெய்த பின்னரும் இராணுவ சேவையிலேயே தொடர்ந்தும் இருந்திருக்கவேண்டும் என்கின்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. இராணுவத்திற்குள் இனந்தெரியாத ஒருவரின் கைமேலோங்கி உள்ளது என்கின்ற சந்தேகமும் நிலவுகிறது.
கோத்தபாய தொடர்பான சந்தேகத்தைத் தெளிவாக்கி, இராணுவத்தைத் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வராது விட்டால், பாரியதொரு அழிவு ஏற்படும். இவ்வாறான வெளித்தெரியாத கைகளின் சிறைக்கைதியாக மைத்திரி அகப்பட்டால், சிறிலங்காவானது பிறிதொரு பாகிஸ்தானாக வருவதை எவராலும் தடுக்க முடியாது.
போர்க் கதாநாயகர்களையும் ராஜபக்சக்களின் தரகர்களாகச் செயற்படும் இராணுவத்தினரையும் மைத்திரி அடையாளங் காணவேண்டும். இவர்களை மைத்திரியால் அடையாளங் காணமுடியாவிட்டால், இந்த நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களை இழிவை ஏற்படுத்துமே அன்றி, போரின் போது ராஜபக்சக்களுக்காகச் செயற்பட்டவர்களுக்கு இழிவை ஏற்படுத்தாது.
மொழியாக்கம் – நித்தியபாரதி