Breaking News

பெண்கள் பற்றிய ஆபாச கருத்து: அதிபர் போட்டியிலிருந்து பின்வாங்க மறுக்கும் ட்ரம்ப்



அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 2005 ஆம் ஆண்டு பெண்களை பற்றி தெரிவித்த ஆபாச கருத்துகளுக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும் தான் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இரண்டு டஜன்களுக்கு மேலான குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள், ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் குடியரசுக் கட்சியில் அவருடன் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் மைக் பென்ஸிற்கு ஆதரவளித்து , ட்ரம்ப் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ட்ரம்பின் மனைவி மெலனியா உட்பட வேறு சிலர் அவரின் அந்த கீழ்த்தரமான கருத்தை கண்டித்துள்ள போதும் அவருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரயன், தான் கலந்து கொண்ட பேரணியில், ட்ரம்ப்புடன் கூட்டாக மேடையில் தோன்றுவதற்கு தான் வைத்திருந்த திட்டங்களைக் கைவிடப்போவதாக தெரிவித்தற்கு பலத்த வரவேற்பையும், எதிர்ப்புக் குரல்களையும் பெற்றார்.