Breaking News

மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை



தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: மத்திய பா.ஜ., அரசு, 2017ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை மனதிலே கொண்டு, எந்த உத்தியையாவது கடைப்பிடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்திற்கு எதிராக…:

தமிழக விவசாயிகளுக்கு முறைப்படி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நியாயமாகக் கொடுக்க வேண்டிய தண்ணீரைத் தர மறுத்து வரும் கர்நாடக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து அந்த அரசை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அந்த மாநிலத்தில் வரவிருக்கின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடத் திடீரென மறுத்து தமிழகத்திற்கு எதிராக காயை நகர்த்தி வருகிறது.
புறக்கணிப்பு:

கடந்த செவ்வாய்க்கிழமை லக்னோவில் நடைபெற்ற தசரா விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் தனது உரையின் தொடக்கத் திலும், பேச்சை முடிக்கும்போதும், “ஜெய் ஸ்ரீ ராம்” என “மதச் சார்பற்ற குடியரசு” என இந்திய அரசமைப்புச் சட்டத்திலே பொறிக்கப்பட்டுள்ளதைப் புறக்கணித்து முழக்கமிட்டார். அத்துடன் நில்லாமல் அவர், அந்த முழக்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடையும் வகையில் உரக்கக் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தனது உரையிலே ராமரின் சிறப்பு பற்றி யெல்லாம் எடுத்துரைத்தார். அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராமரின் வில் அம்பு, அனுமனின் கதாயுதம், மற்றும் விஷ்ணுவின் சின்னமான சுதர்சனச் சக்கரமும் நினைவுப் பரிசுகளாக அளிக்கப் பட்டுள்ளன. மொத்தத்தில் “இந்து சாம்ராஜ்யம்” என்ற கற்பனையில் அனைத்தும் அன்று நடந்தேறின. இவையெல்லாம் உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதிலே வைத்து, பிரதமர் நடத்திய அரசியல் தேர்தல் பிரசாரம் என்றே கருதப்படுகிறது.

கண்டனம்:

லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே ராம சரிதத்தை வெளிப்படையாகப் பிரகடனம் செய்ததின் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமாயண அருங்காட்சி யகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஏக்கர் நிலமும் கண்டறியப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத ரீதியாக மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அங்கே இந்துக்களின் வாக்குகளைப் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் பெறுவதற்காக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியதாகும்.

மத்திய அரசு, குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்படிப்பட்ட நாளொரு வேடம் பொழுதொருநடிப்பு என்ற கபட நாடகமாடும் செயல்களை ஊக்குவிப்பதைத் தவிர்த்து நாட்டு மக்கள் பிரச்சினைகளில் நாள்தோறும் கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.