Breaking News

இலங்கைக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்



சிறிலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது.

பிரசெல்சுக்குச் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்காக உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் உதவித் தலைவருமான பிடெரிக்கா மொகேரினியை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான அபிவிருத்தி நிதி உதவியாகவே, 210 மில்லியன் யூரோ (சுமார் 34 பில்லியன் ரூபா) வழங்கப்படவுள்ளது.

இது, 2007- 2013 ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

நிலையான அபிவிருத்தி, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.