சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா
சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளேன். என் மீது நல்லதொரு நம்பிக்கை சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் முக்கிய சந்திப்பின் போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைப்பேன்.
சுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாழும் இலங்கையர்களின் இருப்புக்கு இன்று பாரிய கேள்விக்குறியேற்பட்டுள்ளது.
இது குறித்து சுவிஸர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் அரசாங்கத்தின் இந்த முடிவில் எப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அல்லது இதற்கான மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்த முடியும். அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சுவிஸர்லாந்தில் எப்படியான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என சந்திப்பின்போது கலந்துரையாடவுள்ளேன்.
சுவிஸில் தஞ்சமடைந்துள்ளவர்கள் என்னுடன் அன்றாடம் தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளனர். அவர்களுக்கு நான் சந்திப்பின் பின்னர் சரியான நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.