Breaking News

மைத்திரி-ரணில் அரசியல் திருமணம்: விவாகரத்துப் பெறாது



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் நடந்துள்ள அரசியல் திருமண ஒப்பந்தம் பலமானது. இவர்களை விவாகரத்துக்கு இட்டுச் செல்ல கூட்டு எதிர்க் கட்சி எடுக்கும் முயற்சி, ஒரு பகல் கனவாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பலந்தொட்ட, மலே கொலனி அல் அக்பர் வித்தியாலயத்துக்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதியையும், பிரதமரையும் மூட்டிவிட்டு, இருவரையும் பிரித்து, இருவருக்கிடையில் கருத்து முரண்பாட்டைத் தோற்றுவித்து, விரிசலை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தைக் குழப்புவதற்கு முடியும் என கூட்டு எதிர்க் கட்சியினர் பகல் கனவு காண்கின்றனர். இது ஒருபோதும் நடைபெற மாட்டாது எனவும் அவர் கூறினார்.