மஹிந்தவை சிறையில் அடைக்க வேண்டும்!
படுகொலை மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட வேண்டும் என்று புரவெசிபலய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரது சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் அரசாங்கத்திடம் அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.
புரவெசிபலய அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பு – மருதானையில் உள்ள சி.எஸ்.ஆர். மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் கம்பஹா மல்வானை பகுதியிலுள்ள காணி ஒன்று அரசுடைமையாக்கப்பட்ட விவகாரம் குறித்தும், மஹிந்த ராஜபக்சவினுடைய குடும்பத்தினரது சொத்துக்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த புரவெசி பலய அமைப்பின் செயற்பாட்டாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவே செயற்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார்.
‘‘மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் கைது செய்யப்பட்டு சிறை தள்ளவும் வேண்டும். இதுவரை மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிலர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. எனவே அவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவது அவசியமாகும். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சர்வாதிகார அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே பதவிலிருந்த போது செயற்பட்டிருந்தார். கோட்டாபய ராஜபக்சவைப் போன்றவர்களை அரச ஊதியத்தைப் பெறும் அதிகாரி ஒருவர் விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் பதிவுசெய்த பின்னர் ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்துகின்ற சந்தர்ப்பத்திற்கு கொண்டுவரும்போது அவ்வாறான அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாகவே நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.ஊடகவியலாளர்களும் அவர்கள் சார்பாயிருக்கக் கூடாதா? விசாரணைகளின்போது அந்த அதிகாரிகள் எவ்வளவு உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
அர்ஜுன் மகேந்திரன் எனக்குப் பிரச்சினையில்லை. விசாரணை அதிகாரிகள் ஓர் அடி பின்வாங்கினால் எமது தலையெழுத்தே மாறிவிடும். அதன் பின்னர் இவர்களை குறிப்பிட்டவர்கள் நாய்களைப் போன்று கொன்று வீதியில் இட்டுவிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படக்கூடாது” – என்றார்.