ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு! யாழில் போராட்டம்!!
மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களின் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்ப்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் காலை 10 30 முதல் 11 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது தொண்டமான் அண்ணாச்சி தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு என்னாச்சி? மலையக அரசியல்வாதிகளுக்கு அமைச்சு பதவி. தோட்ட தொழிலாளர்களுக்கு பிச்சை சம்பளமா? என்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி கடந்த இரு வாரங்களாக மலையக தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் மலையக அரசியல் வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் மக்களில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தோட்ட தொழிலாளர்களே வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் முன்வர வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்தில்வேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் வேடம் போட்டு சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும் நாட்டு மக்களுக்கு ஒரு முகத்தையும் வெளிப்படுத்தும் அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வலிறுத்தியுள்ளார்.
இதேவேளை, மலையக தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரி நேற்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்ட்டில் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் நாளை வ்வுனியா நகரில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.