முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையும் ஆபத்து – எச்சரிக்கும் ஹக்கீம்
உத்தேச புதிய தேர்தல் முறையில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று (08) கொழும்பு, தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்திய அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மூன்றாவது கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆற்றிய உரையிலேயே ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சியாக உருவெடுத்ததன் நோக்கமும், அடிப்படையும் தேர்தல் சீர்திருத்தத்தோடு தான் ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1986ஆம் ஆண்டு கொழும்பு ‘பாஷா விலா’வில் ஓர் அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது, அன்றிருந்த வடகிழக்குச் சூழ்நிலையில் வன்முறைகள் எமது சமூகத்தை பாரதூரமாக பாதித்துக் கொண்டிருந்த நிலைமையில், ஒரு தேர்தலுக்கு முகம் கொடுகின்ற விடயத்தை இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் இணைந்த வடகிழக்கிற்கான தேர்தலை எதிர் கொண்டதில் மிகப் பெரிய சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் நாம் சந்தித்தோம்.
அதில் வடகிழக்குக்கு வெளியில் முதலில் சில தேர்தலுக்கு முகம் கொடுத்து முதன் முதலாக விகிதாசாரத் தேர்தலொன்றில்ரூபவ் இந்தக் கட்சியின் இருப்பு என்பது நாடறியச் செய்யப்பட்டு, உலகறியச் செய்யப்படுகின்ற அவசியம் ஏற்பட்டதற்கான காரணம், நாங்கள் விகிதாசாரத் தேர்தல் முறையின் மூலம் எமது பிரதிநதித்துவத்தை பரவலாகப் பெற்றுக் கொண்டதாகும்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றவை அந்த தேர்தலை பகிஷ்கரித்த நிலையில், ஏராளமான முஸ்லிம்கள்எமது கட்சிக்கு வாக்களித்ததனால் நாங்கள் வடகிழக்கிற்கு வெளியே 12 ஆசனங்களைப் பெற்றிருந்தோம்.
அத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையில் 17 ஆசனங்களைப் பெற்று உத்தியோகபூர்வமான எதிரணியாக செயல்பட்டோம்.
தேர்தல் முறையோடு இணைந்ததாக முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிப் போக்கைப் பற்றி பார்க்கின்ற போது,
குறிப்பாக 12சதவீத வெட்டுப் புள்ளியை குறைத்த விவகாரம் என்பதுதான், பாராளுமன்ற மட்டத்தில் முதலாவது சந்தித் தேர்தலில் எங்களது கட்சிக்கு நான்கு ஆசனங்களை வென்றெடுக்கின்ற வாய்ப்பைத் தந்தது. ஒருசில வாக்கு வித்தியாசத்தில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெறுகின்ற வாய்ப்பை நாங்கள் இழந்தோம்.
எமது மறைந்த தலைவரின் முயற்சியினால் 15 சதவீதமாக இருந்த வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாகக் குறைத்தது இன்னமும் இமாலய சாதனையாகப் பேசப்படுகின்றது. அதனோடு சேர்த்து வேறு விடயங்களையும் நாங்கள் வென்றெடுத்தாலும் அதனையே பெரிதாகப் பேசப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே, நாங்கள் இன்றைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 21 உறுப்பினர்கள் இருக்கின்றோம்.
வடகிழக்கு தமிழ் மக்களையும் மலையக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்னும் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எல்லாமாக 50 சிறுபான்மையின பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். ஆனால், உத்தேச தேர்தல் முறையின் மூலம் இவ்வளவு பேரை பெற்றுக் கொள்ள முடியுமா? எங்களுக்கு உரிய ஆசனங்களை பெறுகின்ற வாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடுமென்பதனால் தான், அதன் வகையராக்களையும், குறைபாடுகளையும் அடையாளங் காண்பதோடு, கலப்புத் தேர்தல் முறை ஏற்கனவே, உள்ளுராட்சித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை நாம் அந்த கலப்புத் தேர்தல் முறையை அனுபவ ரீதியாக பரீட்சித்து பார்க்கவில்லை. அது பற்றி விளக்கமாகப் பேச வேண்டும்.
இந்த புதிய தேர்தல் முறையும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்னர் உள்ளுராட்சி அமைச்சர் அதனுடைய விகிதாசாரக் கலப்பை சற்று மாற்றுகின்ற அதாவது 70க்க 30 வீதம் என்றிருக்கின்ற வட்டார ரீதியான, தொகுதி ரீதியான தேர்தல் நடவடிக்கையில் 30 வீதம் தான் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படலாம் என்ற விஷயமும், குறிப்பாக சிறுபான்மைச் சமூகம் அதுவும் வடகிழக்கிற்கு வெளியே சிதறி வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்ளுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கலாம்.
முன்னயை உள்ளுராட்சி அமைச்சர் பாராளுமன்றத்தில் நாங்கள் வாக்களிப்பதற்கு முன்னர், 60விற்கு 40 என்ற
வீதத்தில் அதனை மாற்றுவோமென்று உத்தரவாதத்தை பாராளுமன்றத்தில் தந்திருந்தார். அதையும் மறக்கடித்து இதனை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என்று முயற்சித்தாலும், உள்ளுராட்சித் தேர்தல் வேறு காரணங்களுக்காக நடைபெறாமலிருப்பது ஓரளவுக்கு வாஸ்தவம் தான் என்று நான் எண்ணுகின்றேன்.
என்னைப் பொறுத்தமட்டில், தேர்தல் நடைமுறை என்பது, பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் என்ற மூன்று தளங்களிலும் வெவ்வேறு நடைமுறைகளில் இருப்பது மக்களை மேலும் குழப்புகின்ற விடயமாக மாறிவிடும். ஆகையால் பாராளுமன்றத் தேர்தலுக்கு அறிமுகப்படுத்துகின்ற அதே முறையைத் தான் ஏனைய தேர்தல்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
அவ்வாறு செய்வதாக ஏற்றுக் கொண்டுதான் இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தான் பெரிய கட்சிகள் இருக்கின்ற தேர்தல் தொகுதிகளை குறைப்பதில் எதிர்நோக்ககின்ற சிக்கலாகும்.
எவ்வளவுதான் மாவட்ட ரீதியான 10ற்கும் மேற்பட்ட தேர்தல்களை நடாத்தி முடிந்திருந்தாலும், அவர்களது கட்சி நடைமுறைகளை தொகுதி சார்பாகத் தான் இன்னமும் செய்து கொண்டு போகின்றார்கள். தொகுதி ரீதியான அமைப்பாளர்களை நியமித்துத் தான் பெரிய கட்சிகளும், ஏனைய கட்சிகளும் அவற்றின் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன.
இந்தப் பின்னணியில் இன்றிருக்கின்ற புதிய தேர்தல் நடைமுறையில் ஏறத்தாழ 240 அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தை அமைப்பது அதில் 140 தேர்தல் தொகுதிகளை அடையாளப்படுத்துவது, விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்ட 93 உறுப்பினர்களையும். அத்துடன் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக வெல்லுகின்ற கட்சிக்கு மேலதிகமாக ஆறு அல்லது ஏழு ஆசனங்களை கொடுக்கின்ற விவகாரமும் பேசப்படுகின்றது.
எங்களைப் பொறுத்தவரை ஸ்திரத் தன்மையைப் பேணுவதற்காக ஆசனங்களை ஒதுக்குவதில் நாங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.
அதேபோல், வடக்கிலே இருக்கின்ற தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற வாக்காளர்களுடைய தொகை புதிய வாக்காளர் இடாப்பில் அதாவது யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் இறுதியான குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் வெகுவாக வடக்கில் குறைந்து காணப்படுகின்ற சூழலில் அங்குள்ள 11 ஆசனங்கள் ஆறாகக் குறைந்து விடக்கூடிய ஆபத்துள்ளது. அதற்கு பதிலீடாக ஒரு தற்காலிக ஏற்பாடாக நான்கு ஆசனங்களையாவது ஒதுக்கீடாக இரண்டு பாராளுமன்ற காலங்களுக்கான வேண்டுகோளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி அதை இரு பிரதானமான கட்சிகளும் பூரணமாக இல்லாவிட்டாலும்
அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடன்பாடு ஓரளவு இருந்தாலும் அக்கட்சி இரு கூறுகளாக இருப்பதன் காரணத்தினால் அதில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் என்பதன் உடன்பாடு இல்லாததைக் காண்கின்றோம்.
160 தொகுதிகளாக இருந்து பல அங்கத்தவர்கள் தொகதிகளாகவும் 168ஆக என்ற தொகுகளை 140ஆக குறைக்கின்ற பொழுது ஒரு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் ஒவ்வொரு தொகுதிக்கும் இருந்தாக வேண்டுமென்று அண்ணளவாக இருந்தாலும்கூட, அந்த பின்னணியில் குறிப்பாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விடயத்தில் முஸ்லிம்களின் செறிவு கூடுதலாக இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் எவ்வளவுதான் முயற்சித்தாலும் நான்கிற்கு மேல் தொகுதிகளை உருவாக்குவதில் சிக்கலாக
விஷயமாக இருக்குமென அனுமானிக்க முடிகின்றின்றது.
வடகிழக்கிற்கு வெளியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகதிகளை அடையாளப்படுத்த வேண்டுமென்றால், புத்தளத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் சிக்கல் நிலை உருவாகும். அதுகூட சோல்பரி ஆணைக்குழுவின் ஓர் ஏற்பாட்டின் பிரகாரம்தான் சாத்தியமாகலாம் என்றார்.
இந்தச் செயலமர்வில் அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.