யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் போதை மாத்திரைகள்!
காரைநகர் கடற்பரப்பினூடாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட 31 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான 6 வகையான போதை மாத்திரைகள் மற்றும் போலி நாணயத்தாள் அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரம் என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் இருவர் மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்களில் விற்பனைக்கு வைக்கப்படாத பாலியல் போதை மாத்திரைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் இந்திய நிறுவனங்களின் பெயர்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படகின் மூலம் நேற்று (சனிக்கிழமை) கடத்திவரப்பட்ட குறித்த பொருட்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, கைதுசெய்யப்பட்ட மூவரையும் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.