ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு பிரதேசத்தில் காணப்படும் ஓட்டுதொழிற்சாலையை மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை மீண்டும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முல்லைத்தீவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாசகூட்டமொன்றில் சந்தித்து மனு ஒன்றை கையளித்ததாகவும் எனினும் தேர்தலில் வெற்றிபெற்றால் குறித்த தொழிற்சாலையை மீள இயக்குவதாக உறுதியளித்ததாகவும் எனினும் தேர்தலில் வெற்றி பெற்றபோதும் வாக்குறுதியை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் கூழாமுறிப்பு பிரதேசத்தில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராசா, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் வை.அனுருத்தனன், மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் நேற்றையதினம் சென்று பார்வையிட்டுள்ளதோடு மீள ஆரம்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.
1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓட்டுத் தொழிற்சாலையில் 75 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். பின்னர் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக ஓட்டுத் தொழிற்சாலை மூடப்பட்டதுடன் இன்றுவரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மறைமுகமான இடம்பெற்று வருவதாகவும் திட்டமிட்டு ஒரு குடியேற்றத்தை மேற்கொண்டு அதனூடாக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி சிறிஸ்கந்தராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை ஓட்டுத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால் பிரதேசத்திலுள்ள பலர் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதேசமக்கள் தெரிவித்தள்ளனர்.