யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை!
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்;பட்ட மக்களுக்கு இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற் கொள்வதற்காக 16 பேர் அடங்கிய அமெரிக்க மருத்துவக் குழுவினர் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் செயற்பாட்டில் குறித்த மருத்துவக் குழுவானது தெல்லிப்பழை வைத்தியசாலையில் 3 தினங்கள் தங்கியிருந்து சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளனர் என வைத்திய கலாநிதி அமுதா கோபாலன் தெரி வித்துள்ளார்.
யாழ்பாடி விடுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்கள் தமது அவயங்களில் தழும்புகளுடனும் ஊனத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதை முழு நோக்கமாக கொண்டு குறித்த குழுவினர் யாழ்.மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர்.
தமது முகங்கள் அலங்கோலமாக இருப்பதால் பலர் சமூகத்தின் முன் வெளிவராமல் ஒளிந்து உள்ளார்கள். இது அவர்களுக்கு பாரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் அறிகிறோம்.
எனவே அவர்களை புது மனிதர்களாக வெளி உலகத்துக்கு காண்பிப்பதுடன் அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம், 9ஆம், 10ஆம் திகதிகளில் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் இந்த சிகிச்சைகள் நடைபெறும். அதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக நடைபெறும்.
எனவே குறித்த சத்திர சிகிச்சையை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ள காரணத்தால் முன்னரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற வேண்டும்.
எனவே குறித்த சிகிச்சையை மேற்கொள்ள விரும்புபவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் தமது பதிவுகளை செய்து கொள்ள முடியும்.அத்துடன் 0718186185 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.