சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு
கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. ஒரு வாரத்திற்கும் மேல் நடந்த போராட்டத்தின் உச்சசட்டமாக சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிாிழந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவும், நடுவர்மன்ற உத்தரவின்படி தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு, இழப்பீடுகள் வழங்கிட வற்புறுத்தியும், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்திட வற்புறுத்தியும், மொத்தத்தில் தமிழக விவசாய பெருங்குடி மக்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் காக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட மத்திய - மாநில அரசுகளை வற்புறுத்தி நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை எழும்பூரில் இன்று பிற்பகலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் இயக்குநர்கள் அமீர், சேரன் மற்றும் ரவி மரியா உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியில் கட்சித் தொண்டர் திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார் பங்கேற்றார்.
ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி எழும்பூரில் முடிவடைய இருந்தது. புதுப்பேட்டை அருகே பேரணி வந்து கொண்டிருந்தபோது விக்னேஷ்குமார் தீக்குளிக்க முயன்றார். உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த கட்சியினர் தண்ணீர் மற்றும் வேப்பம் இலை கொண்டும் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விக்னேஷ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேரணி எழும்பூரில் முடிவடைந்து அங்கு கூட்டம் நடைபெற்றது. சிறிது நேரமே கூட்டத்தில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை உடனடியாக சந்தித்தார். அப்போது, "காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. தீக்குளிப்பை நாம் தமிழர் கட்சி ஊக்கப்படுத்தவில்லை. தமிழர் என்ற உணர்வுடன் ஒன்றுபடுவோம். பேரணியின்போது தீக்குளிப்பு நடந்தது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்" என்றார்.
தீக்குளித்த பா.விக்னேஷ், தன்னுடைய இந்த முடிவு குறித்து நேற்றே ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில், நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை(தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை உயர்த்திக் கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன். அப்போதாவது மானத் தமிழ் இனம் கொதித்து எழட்டும். மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவு இப்போது வைரலாக பரவுகிறது. நேற்றே இந்த பதிவு எங்களுக்கு தெரிந்து இருந்தால் அவரது தற்கொலை முடிவை தடுத்து இருப்போம் என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
மாணவர்களே கோபங்கொள்..! விக்னேஷிடம் இருந்த வாசகம்
"காவிரியில் நீரைப் பெற்று விவசாயத்தை மீட்டெடுக்க போராடுங்கள். என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள். எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூடப்போராடுங்கள். இந்தி திணிப்பால் தமிழ்மொழி அழிந்துவிடும் என்று 800க்கும் மேற்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக்கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக்கூடாது
மருத்துவமனைக்கு சென்ற சீமான் மற்றும் திருமா |
என்பதற்காக போகும் முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும். அதற்காக போராடுங்கள். நம் மண்ணில் அந்திய முதலீட்டை தவிர்த்து தமிழ்த்தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். நான் வைத்த கோரிக்கை சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பேரணியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியினர் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் வந்து கொண்டிருந்தபோது, கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனம் ஒன்று வந்து சென்றது. இதனைப் பார்த்த நாம் தமிழர் கட்சியினர், அந்த வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்த வாகனத்தை மீட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.