Breaking News

இலங்கை: வடமாகாண அரசு பணியில் நிரந்தர நியமனம் பெற வயது வரம்பு 40-ஆக உயர்வு



வடமாகாணத்தில் தொண்டர்களாகவும் தற்காலிக அடிப்படையிலும் அரச சேவையில் பணியாற்றி வருகின்ற 40 வயதுக்கு உட்பட்ட அனைவரையும் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே  நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

யுத்த மோதல்கள் நடைபெற்ற காலம் தொடக்கம், வடமாகாணத்தில் அரச திணைக்களங்களில் நிலவிய ஆளணி பற்றாக்குறை காரணமாக பலர் தொண்டர் சேவை மற்றும் தற்காலிக அடிப்படையில் பல பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தபோது, அவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டிருப்பதாகக் கூறி, அதிகாரிகள் அவர்களை நிராகரித்தார்கள்.

அரசு சேவையில் சேர்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று வேலைக்கு ஆட்சேர்ப்பதில் அரசாங்கம் நிபந்தனை விதித்திருப்பதை அதிகாரிகள் தமது மறுப்புக்குக் காரணமாகத் தெரிவித்திருந்தார்கள்.

இதனையடுத்து, நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே வடமாகாண ஆளுனரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வடமாகாணத்தில் வேலையில்லாத பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால், பெரும் எண்ணிக்கையானவர்கள் தொண்டர் சேவை அடிப்படையில் அரச திணைக்களங்களில் பதினைந்து இருபது வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்கள்.

அவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதனால், அவர்களை அரச சேவையில் நிரந்தரமாக உள்வாங்குவதற்கு அவர்களுடைய வயது ஒரு பிரச்சினையாக மாறியிருக்கின்றது. அரசு சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

எனவே, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாணத்தில் அரசு சேவையில் சேர்வதற்கான வயது எல்லையை 35-லிருந்து 40-ஆக நாங்கள் உயர்த்தியுள்ளளோம். இது அவர்களுக்கு நன்மையளிக்கும் என்று நம்புகிறேன் என்று ஆளுனர் ரெஜினோல்ட் குரே கூறினார்.

கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிபவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆளுனரின் இந்த நடவடிக்கைகளின் மூலம் ஆயிரம் பேர் வரையில் நன்மையடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.