Breaking News

இலங்கையில் காணாமற்போனோர் விவகாரம் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆராய்வு



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் ஆராயப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. வரும் 30ஆம் நாள் வரை இந்தக் கூட்டத்தொடர் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக நடந்த போரில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், ஆராயப்படவுள்ளது.

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு, 2015ஆம் ஆண்டு சிறிலங்காவில் மேற்கொண்ட பயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாளை மறுநாள் நடக்கவுள்ள, கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக, சிறிலங்கா அரசாங்கம் பேரவைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் என்றும் தெரியவருகிறது.

காணாமற்போனோர் தொடர்பான பணியகம் உருவாக்கப்படவுள்ளமை உள்ளிட்டமனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயக நடைமுறைகள், நல்லாட்சியை ஏற்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்த அறிக்கையில் விளக்கிக் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதாகவும், இந்தக் குழுவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆலோசிப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தெரியப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சிறிலங்காவின் சார்பில், ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.