Breaking News

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – கமால் குணரத்ன



பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற தனது நூலில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்தம்புதிய ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அந்த நடவடிக்கை முற்றாக வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.

பாரஊர்திச் சுமைகளில் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், காட்டுக்குள் விடுதலைப் புலிகளிடம் கையளித்த போது, எமது புதைகுழிகளை நாமே தோண்டுவதாக நினைத்தோம். ஆனாலும், வேறுவழியின்றி கட்டளையை நிறைவேற்றினோம். அதிஷ்டவசமாக இந்த அசுத்தமான ஆயுதப் பரிமாற்றத்தில் நான் பங்கெடுக்கவில்லை.

புலிகளுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட அந்த ஆயுதங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்தது. இந்த நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருந்த இளம் அதிகாரிகள் சிலருடன் நான் நீண்ட உரையாடல்களை மேற்கொண்டிருந்தேன். அவர்கள் தமது வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

புலிகள் தமது புதிய ஆயுதங்களுடன் செல்லும் போது, அவர்களிடம் காணப்பட்ட ஆணவம், கேலியான புன்னகை, உடல்மொழி என்பன, ஒருநாள் இந்த ஆயுதங்கள் எல்லாம் உங்களைக் குறிவைக்கும் என்பது போல இருந்தது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம் புதியதான பொலித்தீன் உறைகளில் சுற்றப்பட்ட- கிறீஸ் கவசமிடப்பட்ட ஆயுதங்கள் வெடிபொருட்களே பார ஊர்திகளில் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டன.

அரசாங்கத்துடன் பேச்சு நடத்திய விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராசா எனப்படும், மாத்தயாவை, பிரேமதாச நூறு வீதம் நம்பினார் என்பது எமக்கு எல்லாம் தெரியும்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, 1990 மார்ச் மாதம் சிறிலங்காவில் இருந்து இந்தியப் படைகள் வெளியேறியதும், உடனடியாகவே ஈழப்போர்-2 வெடித்தது” என்றும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.