டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல்: சூடான் அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
சூடானின் டார்பர் பகுதியில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசு மீது பொது மன்னிப்பு சபை குற்றம்சாட்டியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிபராக இருப்பவர், உமர் அல் பஷீர் (வயது 72). இவர் ராணுவ பிரிகேடியராக இருந்தபோது 1989-ம் ஆண்டு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆயுதம் ஏந்தாமல் புரட்சி செய்து அதிகாரத்துக்கு வந்தார்.
அங்குள்ள டார்பர் நகரில், சூடான் விடுதலை முன்னணி, நீதி மற்றும் சமத்துவத்துக்கான முன்னணி ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் அரசுக்கு எதிராக 2003-ம் ஆண்டு தொடங்கி போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை உமல் அல் பஷீர் ஒடுக்கினார். இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
எனவே, போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், மனித உரிமை குற்றங்கள் செய்ததாகவும் அதிபர் உமல் அல் பஷீர் மீது நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு உள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் டார்பரில் உள்ள ஜெபேர் மர்ரா பகுதியில் சூடான் அரசாங்கம் 30 ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இதில் 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
டார்பர் பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்களை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயன ஆயுதங்களை பயன்படுததுவது போர் குற்றம். எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் நம்பகத்தன்மை கொண்டது. சர்வதேச தண்டனைக்கு பயப்படாமல் டார்பரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தியிருப்பதையே இது காட்டுகிறது’ என பொது மன்னிப்பு சபை இயக்குனர் திரானா ஹசன் தெரிவித்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என ஐ.நா.வுக்கான சூடான் தூதர் ஓமர் தகாப் பாதல் முகமது தெரிவித்துள்ளார்.
நச்சு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்று, ரசாயன ஆயுத உடன்படிக்கையில் சூடான் 1999ம் ஆண்டு கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.