அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை அரசு விரும்பவில்லை – அருட்தந்தை சக்திவேல்
நல்லாட்சி அரசு தமிழ் அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றது. அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற விருப்பம் அரசிடம் இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகளின் அவலநிலை குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசு தமிழ் அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்குவதை நோக்கமாகக்கொண்டே செயற்படுகின்றது.
அரசின் விருப்பம் அதுவே. அதிகாரிகளும் அந்த நோக்கிலேயே செயற்படுகின்றனர். தமிழ் அரசியல் கைதிகளுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் அரசு தமிழ் அரசியலை தண்டிக்க விரும்புகின்றது. தமிழர் அபிலாஷைகளை தண்டிக்க விரும்புகின்றது. இதனையே நாங்கள் நிராகரிக்கின்றோம். இது தமிழ் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த இலங்கையின் பிரச்சினை. தேசிய பிரச்சினை. இதன் காரணமாகவே அரசியல் தீர்மானம் எடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்கின்றோம்.
இந்த அரசும் முன்னைய அரசைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்த நிலை மாறவேண்டும். அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியும், தங்கள் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரியும், தங்கள் வழக்குகளை வடக்கு, கிழக்கிலுள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.