துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரணதண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஒக்ரோபர் 8ஆம் நாள் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலின் போது, அங்கொட பகுதியில் வைத்து பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைகள் தொடர்பாக, அந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவரின் முன்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதன்படி, துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை விதிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதை முன்னிட்டு, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.