உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புத்தர் சிலை
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் புதன்கிழமை மாலை வைக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.
இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பினரே கனகராயன்குளம் புத்தர் சிலையை உடைத்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் என்.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அருண்காந்த் கூறியுள்ளார்.
கனகராயன்குளம் குறிசுட்டகுளம் அம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையே உடைக்கப்பட்டிருந்தது.
அந்த அம்மன் கோயில் பூசாரி உள்ளிட்ட அந்தப் பிரதேசத்து மக்கள், புதிய புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்ததாகவும் அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கனராயன்குளம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.