தீவிரமடையும் ரணில் - மைத்திரிக்கு இடையிலான பனிப்போர்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் பனிப்போர் ஒன்று இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
இலங்கையில் தற்போது பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து ஆட்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் பிரதான இரண்டு கட்சிகளினது தலைவர்களும் தமது ஆளுமையை வெளிக்காட்ட முயற்சித்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்க கட்சியின் 65வது ஆண்டு நிறைவு மாநாடு குருநாகலில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை உணர்ந்துகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விடவும் அதிகளவு மக்கள் பலத்தை காட்டவேண்டிய தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், அதில் அதிகளவான மக்களை கலந்துகொள்ள செய்வதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கட்சி மாநாட்டுக்கு அனைத்து தேர்தல் தொகுதியில் இருந்தும் அதிகளவான ஆதரவாளர்களை அழைத்து வர வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.