'உத்தரவிடும் அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை'
இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கவேண்டும். மாறாக அடாத்தாக பிடித்து வைத்து, சுவீகரிக்க முயலக்கூடாது' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின் கடிதத்துக்கமைய, 'வலிகாமம் வடக்கில் விடுவிக்க முடியாத மற்றும் இராணுவம் தொடர்ந்து வைத்திருக்கவுள்ள காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும்' என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், மக்களிடம் தெரிவித்தமை தொடர்பில் சபையில் விவாதம் நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், 'இராணுவ முகாமுக்காக தனியாருடைய காணிகைள அபரிக்க முடியாது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரும், முதலமைச்சரும் அருகருகே தான் உள்ளனர். கட்டளைத் தளபதி அனுப்பிய கடிதம் தொடர்பில், மாவட்டச் செயலாளர், முதலமைச்சருக்கு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அந்தக் கடிதம் தொடர்பில் தன்னிச்சையாக செயற்பட்டு, மக்களுக்கும் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர் என்பவர், இராணுவத் கட்டளைத் தளபதிக்கு மேல் அதிகாரம் உள்ளவர். மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் இராணுவத் கட்டளை தளபதிக்கு இல்லை.
காணியின் பெறுமதி, அதன் வலி என்பன காணி உரிமையாளர்களுக்குத் தான் தெரியும். இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கலாம். ஆனால் உத்தரவிட்டு பறிக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பேசக்கூடாது, ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது, இதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் என கூறிக்கொண்டு திரிபவர்களுக்கு, இராணுவம் இவ்வாறு கடிதங்கள் மூலம் காணிகளை சுவீகரிக்கும் விடயம் கண்ணுக்குத் தெரியவில்லையா? நல்லாட்சி என்று சர்வதிகார ஆட்சி நடக்கின்றது.
தேசிய பாதுகாப்பு முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக இராணுவத்துக்கு 4 அல்லது 5 ஆயிரம் காணிகள் கொடுக்க முடியாது. அவ்வளவு காணிகளை இராணுவத்தினர் வைத்திருந்து ஓடிப்பிடித்து விளையாடப் போகின்றனரா?' என்றார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
'இராணுவத்தளபதி அனுப்பியுள்ள கடிதத்தில், விடுவிக்கப்பட்ட காணிகளில் காணி உரிமையாளர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்ட காணிகளும் அடுத்த கட்டத்தில் வழங்கப்படும். விடுவிக்கப்படாது எனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகளும், நட்டஈடும் வழங்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. எங்களுடன் கதைத்துப் பேசி செய்ய வேண்டிய விடயங்களை, அவர்களை நினைத்ததைபோல செய்ய முடியாது' என்றார்.
ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன்
"இராணுவ ஆட்சியின் தான் இவ்வாறு இராணுவத் கட்டளைத் தளபதி உத்தரவிடமுடியும்.
ஜனநாயக ஆட்சியென்றால், பாதுகாப்பு அமைச்சு, மாகாண சபையுடன் கலந்துரையாடி அதன் பிறகே இவ்வாறு செய்யும். இராணுவத்தளபதி ஒருபோதும் மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிடமுடியாது. காணி சுவீகரிப்பு என்றால், என்ன இடத்தில்? எவ்வளவு காணி வேண்டும்? என்று பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்றதுக்கு தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அது தொடர்பில் விவாதம் நடைபெற்று, மக்களுக்கான தீர்வுகள் கண்டபின்னரே முடிவெடுத்து, காணி சுவீகரிக்க முடியும். ஆனால் இங்கு காணிகளை ஆக்கிரமித்து வைத்து, அவற்றை சுவீகரிக்கின்றோம் என்கின்றனர்" என்றார்.