Breaking News

தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா?



மலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னால் மஹிந்தவின் சதித்திட்டம் உள்ளதா என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் தூதுவருக்கு எமது கவலையை தெரிவிப்பதோடு இந்த தாக்குதலையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ் தான் சிங்கள மக்களின் தலைவர் என்றும் தான் செல்லும் நாடுகளில் தமிழ் மக்கள் தனக்கு பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களுக்கு காண்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 

தூதுவருக்கு தாக்குதல் நடத்தியதில் இலங்கையர் எவரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள். அத்துடன் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த கே.பி.யை மலேசியாவில் இருந்து தான் கொண்டுவந்தார்கள். அதேபோன்று மஹிந்த செல்லும் இடமெல்லாம் உதயங்க வீரதுங்க செல்கின்றார். அப்படியிருக்கும்போது இந்த சம்பவம் இவர்களுக்கு தெரிவித்து செய்யப்பட்ட தாக்குதலாகவே தெரிகின்றது. அத்தடன் மலேசியாவில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதும் அவரின் சுவரொட்டிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.